Mar 22, 2014

Bachelors

"நான்வேலைக்கு கிளம்புறேன்"

"சரி"

"சாப்பாடுசெஞ்சுட்டேன். Table-  இருக்கு"

"சரி"

"சாப்டுக்கோ"

"சரி"

"நான்போய் தூங்குறேன். Tired- இருக்கு"

உறங்கச்சென்றவன் எழுந்திருந்தான், பணிக்குச் சென்றவன் திரும்பியிருந்தான்.

"நான்போய் தூங்குறேன். Tired- இருக்கு"

"சரி"

"சாப்டுக்கோ"

"சரி"

"சாப்பாடுசெஞ்சுட்டேன். Table-  இருக்கு"

"சரி"

"நான்வேலைக்கு கிளம்புறேன்"

=======================================================================

மாலை மாற்று (palindrome) பற்றி இணையத்தில் துளாவியபோது திருஞானசம்பந்தர் எழுதிய மாலை மாற்றுபாடலை படித்துத் துணுக்குற்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகஎழுதியது தான் இந்த bachelors [தலைப்புஉபயம் - மனைவி] line palindrome கதை. இது சிறு முயற்சி.

மாலை மாற்று பற்றி தெரியாதவர்களுக்கு- எந்த திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும்சொல் அல்லது சொற்றொடர் மாலைமாற்று எனப்படும்.

உம்: விகடகவி; மாடு ஓடுமா

திருஞானசம்பந்தர்எழுதிய படலை படிக்க கீழிருக்கும்முகவரியை சொடுக்கவும்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm


நன்றி,
வினோத்

Mar 8, 2014

பாலா - I

இரண்டாயிரமாம் வருட ஆரம்பத்தின் ஒரு நாள். வழக்கம் போல் நண்பன் அரவிந்த் வீட்டில் நான், அரவிந்த், பாலா, ஜெய்நுல் அனைவரும் கதை பேசிக் கொண்டிருந்தோம்.

அரவிந்த், "இந்த படம் பாத்துட்டியா?" C.D கவர் ஒன்றை நீட்டி கேட்டான்

நான், "இன்னும் இல்ல"

அரவிந்த் வீட்டு கம்ப்யூட்டர் ரூமில் அந்த படத்தைப் பார்க்கக்  கூடினோம். கூட்டத்தில் அந்த படத்தை பார்க்காத ஒரே பிரகஸ்பதியாக நான் இருக்க, 'சூப்பர் படம் டா', 'செம்ம டச்சிங்', 'பிண்ணிட்டான்' என்று அவனவன் படத்தின் பெருமை பேசிக் கொண்டிருந்தான்.

எரிச்சலில் அலட்சியமாக நான், "ஹீரோயின் செத்துடுவா! ஹீரோ லூசாயிடுவான்! அவ்ளோதானே டா" என்றேன்

"படம் பாத்துட்டு பேசுடா வெண்ண" என்றே பதில் வந்தது

என் நேரமோ என்னவோ தெரியவில்லை படத்தின் மூன்று V.C.D-ல் இரண்டாம் C.D மட்டுமே கிடைக்க வேறு வழியில்லாமல் நாயகன் நாயகியிடம் காதலைச் சொல்லும் கட்டத்திலிருந்து தான் படம் பார்க்க ஆரம்பிதேன் (கடைசி ரீலில் காதலைச் சொல்லும் படத்திற்கு இது தேவலை என்று தோன்றியது). படம் ஓட ஓட படத்தோடு நானும் ஐக்கியமாகிப் போனேன். பாட்டு, சண்டை, இடைவேளை, நண்பர்கள் கேலி, நாயகியின்  கோபம், நாயகியை கடத்திச் சென்று தன் காதலை உருகி உருகிச் சொல்லும் நாயகன், ஒரு கும்பல் நாயகனை அடித்து அவன் தலையை பாறையில் முட்டி வீசி எறிவது என்று அந்த பாகம் முடிந்தது.

திரும்பி வீட்டுக்கு வந்த பிறகும் அதே நினைவு. இரவு உணவு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. மனம் முழுக்க அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல ஒரு வாரம் வரை அந்தத் திரைப்படம் என் தூக்கத்தை களவாடியிருந்தது. அப்போது என் மனதில் உதித்த ஒரே கேள்வி

"யார்ரா இந்த பாலா?"

பிறகு ஒரு வழியாக அந்தத் திரைப்படத்தை முழுமையாக பார்த்து, ஆனந்த விகடனில் விமர்சனம் படித்து (50/100 மதிப்பெண்) மகிழ்ந்து போனேன். இயக்குனர் பாலாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

அது நாள் வரை ஹீரோ மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு பாலாவின் படம் திரையுலகம் பற்றிய என் எண்ணத்தை மாற்றியது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று ஹீரோக்கள் படம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதன் முதலில் இயக்குனர் படம் காட்டியது 'சேது'


பெரிய ஹீரோ இல்லை, பிரபலமான நடிகர் நடிகைகள் (நடிகர் சிவகுமார் தவிர) இல்லை, கவர்ச்சி நடனம் இல்லை, பஞ்ச் டையலாக் இல்லை, பிரதான வில்லன் இல்லை இப்படி இன்னும் சில இல்லைகள். ஆனாலும் சேது வென்றான். Rest is History.




இது நடந்து சில நாட்களுக்கு பிறகு பாலாவின் பேட்டி ஒரு வார இதழில் வெளியாகி இருந்தது. என்னால் என்றும் மறக்க முடியாத பாலாவின் பதில் ஒன்று

கேள்வி: உங்க முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் நடுவுல ஏன் இவ்வளவு இடைவெளி?


பாலா பதில்: வேடிக்கையா சொல்லனும்னா என்னோட முதல் படமே முப்பதோரு வருஷம் கழிச்சுத் தான் எடுத்திருக்கேன்.

Mar 5, 2014

நட்பு

தங்கையின் திருமணம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த். உறவினர் கூட்டம் நண்பர்கள் வட்டம் என எங்கும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். அனைவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர். அப்போதுதான் வந்தான் செந்தில், ஆனந்தின் பள்ளி நண்பன், ஆனந்திற்கு பரிட்சியம் இல்லாத இன்னொரு நபருடன்.

"இவன் பிரபு... என் காலேஜ் ஃப்ரென்டு..." ஆனந்துக்கும் அவன்  தாய் தந்தைக்கும் தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் செந்தில்.

பிரபு, "ஹலோ"

"வாங்க... முதல்ல சாப்டுங்க..." என்று இருவரையும் அழைத்துச்  சென்று காலை பந்தியில் அமர வைத்தான் ஆனந்த். இருவரையும் நல்லபடியாக கவனித்துக் கொண்டான். வேண்டியது எல்லாம் எடுத்து வரச் செய்தான். செந்திலை கவனித்தான் என்றாலும் பிரபுவை கொஞ்சம் அதிகமாகவே கவனித்தான். முகூர்த்தம் வந்தது. தாலி கட்டியாயிற்று. திருமணம் முடிந்தது. மதிய உணவுக்கும் பிரபுவுக்கு அதிக கவனிப்புதான்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தின் தந்தை பசுபதிக்கு குழப்பம் கலந்த ஆச்சரியம்.

மகனை தனியாக அழைத்து "அவன் உன்னோட நெருங்குன தோஸ்தா என்ன? ஓசில சாப்ட வந்தவன இப்படியெல்லாம் கவனிக்கணுமா?" கடிந்து கொண்டார்.

"அப்படி சொல்லாதிங்கப்பா. அவன் இங்க என் ஃப்ரென்ட நம்பி வந்திருக்கான். அவன நான் நல்லபடியா கவனிக்கிறது என் நண்பனுக்கும் எங்க நட்புக்கும் நான் கொடுக்குற மரியாதை"


"என்னமோ போ" என்று சலித்துக் கொண்டே பசுபதி நகர, பந்தியில் பிரபுவிடம் செந்தில் கிசுகிசுப்பாக "நான் சொல்லல. செமையா  கவனிப்பான்னு. இவன நம்பி இன்னும் ஒரு பத்து பேர கூட்டிட்டு வரலாம். சரியான இளிச்சவாயன்" என்றான் எள்ளலாக.