Mar 8, 2014

பாலா - I

இரண்டாயிரமாம் வருட ஆரம்பத்தின் ஒரு நாள். வழக்கம் போல் நண்பன் அரவிந்த் வீட்டில் நான், அரவிந்த், பாலா, ஜெய்நுல் அனைவரும் கதை பேசிக் கொண்டிருந்தோம்.

அரவிந்த், "இந்த படம் பாத்துட்டியா?" C.D கவர் ஒன்றை நீட்டி கேட்டான்

நான், "இன்னும் இல்ல"

அரவிந்த் வீட்டு கம்ப்யூட்டர் ரூமில் அந்த படத்தைப் பார்க்கக்  கூடினோம். கூட்டத்தில் அந்த படத்தை பார்க்காத ஒரே பிரகஸ்பதியாக நான் இருக்க, 'சூப்பர் படம் டா', 'செம்ம டச்சிங்', 'பிண்ணிட்டான்' என்று அவனவன் படத்தின் பெருமை பேசிக் கொண்டிருந்தான்.

எரிச்சலில் அலட்சியமாக நான், "ஹீரோயின் செத்துடுவா! ஹீரோ லூசாயிடுவான்! அவ்ளோதானே டா" என்றேன்

"படம் பாத்துட்டு பேசுடா வெண்ண" என்றே பதில் வந்தது

என் நேரமோ என்னவோ தெரியவில்லை படத்தின் மூன்று V.C.D-ல் இரண்டாம் C.D மட்டுமே கிடைக்க வேறு வழியில்லாமல் நாயகன் நாயகியிடம் காதலைச் சொல்லும் கட்டத்திலிருந்து தான் படம் பார்க்க ஆரம்பிதேன் (கடைசி ரீலில் காதலைச் சொல்லும் படத்திற்கு இது தேவலை என்று தோன்றியது). படம் ஓட ஓட படத்தோடு நானும் ஐக்கியமாகிப் போனேன். பாட்டு, சண்டை, இடைவேளை, நண்பர்கள் கேலி, நாயகியின்  கோபம், நாயகியை கடத்திச் சென்று தன் காதலை உருகி உருகிச் சொல்லும் நாயகன், ஒரு கும்பல் நாயகனை அடித்து அவன் தலையை பாறையில் முட்டி வீசி எறிவது என்று அந்த பாகம் முடிந்தது.

திரும்பி வீட்டுக்கு வந்த பிறகும் அதே நினைவு. இரவு உணவு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. மனம் முழுக்க அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல ஒரு வாரம் வரை அந்தத் திரைப்படம் என் தூக்கத்தை களவாடியிருந்தது. அப்போது என் மனதில் உதித்த ஒரே கேள்வி

"யார்ரா இந்த பாலா?"

பிறகு ஒரு வழியாக அந்தத் திரைப்படத்தை முழுமையாக பார்த்து, ஆனந்த விகடனில் விமர்சனம் படித்து (50/100 மதிப்பெண்) மகிழ்ந்து போனேன். இயக்குனர் பாலாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

அது நாள் வரை ஹீரோ மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு பாலாவின் படம் திரையுலகம் பற்றிய என் எண்ணத்தை மாற்றியது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று ஹீரோக்கள் படம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதன் முதலில் இயக்குனர் படம் காட்டியது 'சேது'


பெரிய ஹீரோ இல்லை, பிரபலமான நடிகர் நடிகைகள் (நடிகர் சிவகுமார் தவிர) இல்லை, கவர்ச்சி நடனம் இல்லை, பஞ்ச் டையலாக் இல்லை, பிரதான வில்லன் இல்லை இப்படி இன்னும் சில இல்லைகள். ஆனாலும் சேது வென்றான். Rest is History.




இது நடந்து சில நாட்களுக்கு பிறகு பாலாவின் பேட்டி ஒரு வார இதழில் வெளியாகி இருந்தது. என்னால் என்றும் மறக்க முடியாத பாலாவின் பதில் ஒன்று

கேள்வி: உங்க முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் நடுவுல ஏன் இவ்வளவு இடைவெளி?


பாலா பதில்: வேடிக்கையா சொல்லனும்னா என்னோட முதல் படமே முப்பதோரு வருஷம் கழிச்சுத் தான் எடுத்திருக்கேன்.

4 comments:

  1. http://nathikaraiyil.blogspot.com/2014/03/blog-post.html மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் சார், நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் ப்லாகை தொடர்வதற்கும்.

      Delete
  2. சேது படத்தின் வெற்றியில் பாலாவின் திரைக்கதை நேர்த்திக்கும் மனதைத் தொட்ட மனிதநேயத்திற்கும் எத்தனை பங்கு உண்டோ அதே அளவு பங்கு படத்திற்காய் தன் பங்களிப்பைச் செலுத்திய கதாநாயகன் விக்ரமுக்கும் உண்டு. ஆக. கதாநாயகன் இல்லாத படம் இல்லை என்பது என் கருத்து. மற்றபடி உங்கள் வரிகள் அனைத்தும் எனக்கு உடன்பாடே... அருமையான எண்ணப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. பால கணேஷ் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நடிகர் விக்ரம் பற்றிய உங்கள் கருத்து உண்மையே. ஹீரோவுக்கும் கதையின் நாயகனுக்கும் வித்தியாசம் அதிகம். ஒரு சிறந்த இயக்குனரால் மட்டுமே எந்த ஒரு நடிகனையும் கதையின் நாயகனாக்க முடியும். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

      Delete