Mar 5, 2014

நட்பு

தங்கையின் திருமணம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த். உறவினர் கூட்டம் நண்பர்கள் வட்டம் என எங்கும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். அனைவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர். அப்போதுதான் வந்தான் செந்தில், ஆனந்தின் பள்ளி நண்பன், ஆனந்திற்கு பரிட்சியம் இல்லாத இன்னொரு நபருடன்.

"இவன் பிரபு... என் காலேஜ் ஃப்ரென்டு..." ஆனந்துக்கும் அவன்  தாய் தந்தைக்கும் தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் செந்தில்.

பிரபு, "ஹலோ"

"வாங்க... முதல்ல சாப்டுங்க..." என்று இருவரையும் அழைத்துச்  சென்று காலை பந்தியில் அமர வைத்தான் ஆனந்த். இருவரையும் நல்லபடியாக கவனித்துக் கொண்டான். வேண்டியது எல்லாம் எடுத்து வரச் செய்தான். செந்திலை கவனித்தான் என்றாலும் பிரபுவை கொஞ்சம் அதிகமாகவே கவனித்தான். முகூர்த்தம் வந்தது. தாலி கட்டியாயிற்று. திருமணம் முடிந்தது. மதிய உணவுக்கும் பிரபுவுக்கு அதிக கவனிப்புதான்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தின் தந்தை பசுபதிக்கு குழப்பம் கலந்த ஆச்சரியம்.

மகனை தனியாக அழைத்து "அவன் உன்னோட நெருங்குன தோஸ்தா என்ன? ஓசில சாப்ட வந்தவன இப்படியெல்லாம் கவனிக்கணுமா?" கடிந்து கொண்டார்.

"அப்படி சொல்லாதிங்கப்பா. அவன் இங்க என் ஃப்ரென்ட நம்பி வந்திருக்கான். அவன நான் நல்லபடியா கவனிக்கிறது என் நண்பனுக்கும் எங்க நட்புக்கும் நான் கொடுக்குற மரியாதை"


"என்னமோ போ" என்று சலித்துக் கொண்டே பசுபதி நகர, பந்தியில் பிரபுவிடம் செந்தில் கிசுகிசுப்பாக "நான் சொல்லல. செமையா  கவனிப்பான்னு. இவன நம்பி இன்னும் ஒரு பத்து பேர கூட்டிட்டு வரலாம். சரியான இளிச்சவாயன்" என்றான் எள்ளலாக.

8 comments:

  1. எளிமையான மனோதத்துவத்தை குழப்பமில்லாத நடையில அழகாச் சொல்லியிருக்கீங்க. எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு கோணங்கள் இருக்கறது நிஜந்தான். நிறைய சிறுகதைகள் எழுதுங்க. நிறைய வாசகர்கள் கிடைக்கட்டும் யாவற்றுக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.,1

    ReplyDelete
    Replies
    1. பால கணேஷ் சார், ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நீங்கள் சொன்னது போல இனி நிறைய சிறுகதைகள் (மற்றும் சொந்தக் கதைகள்) எழுதுகிறேன்.

      Delete
  2. சார்... ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க பின்னூட்டம் பார்த்ததும்!!! எனக்கு ப்ளாக் அறிமுகபடுதினது இந்த பிளாக்கர் தான்!

    ReplyDelete
    Replies
    1. சமீரா அக்காவுக்கு, என் இடுகையை பகிர்ந்தமைக்கும் பல பகிர்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.

      Delete
  3. நட்பை எள்ளலாக்கிவிட்டார்களே..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

      Delete
  4. இரக்க குணமும் இங்கிதமும் சற்று அதிகமாய் கொண்டவர்களை இன்றைய சமூகம் இளிச்சவாய்ர்களாகத்தான் பாவித்து விடுகிறது ! நல்ல கருத்து

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி சாமானியன்...

      Delete